பிரிட்டிஷ்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததைப் பற்றி ஒரு பழைய அம்மானை இருந்தது.
அதில் பிரிட்டிஷ்காரர்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு வந்து கடை விரித்தனர் என்றதைப் பற்றி ஒரு வேடிக்கையான விபரம் இருக்கிறது.
பழங்காலத்தில் நிலவிய கற்பனையை - செவிவழியாகவும் மரபுவழியாகவும் வந்த கதையைஅடிப்படையாக வைத்து அம்மானையை இயற்றிய புலவர் எழுதியிருக்கிறார்.
அம்மானையில் கண்ட சரிதத்தை என்னுடைய பாணியில் - நடையில் எழுதியிருக்கிறேன்.
மேலே படியுங்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் சிவப்புக் கோட்டுப் போட்டுக்கொண்டு வந்தார்களாம். வந்தவர்கள் சென்னையின் அருகில் இறங்கினார்கள். அங்கிருந்த மன்னர் ஒருவரை வந்து பார்த்து வணங்கினர்.
அந்த மன்னன் என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள், "நாங்கள் வர்த்தகம் செய்ய ஒரு சிறு இடம் வேண்டும்," என்று கேட்டனர்.
இடம் தர மறுத்த மன்னனிடம், "நீங்கள் அதிகம் இடம் தரவேண்டாம். எங்களிடம் உள்ள ஆட்டுத்தோல் அளவு பரப்புடைய இடம் மட்டும் தந்தால் போதும்", என்றார்கள்.
"சரிதான். சரியான மாங்கா மடையங்க்ய போல்ருக்கு", என்று மன்னனும் தளவாய் பிரதானிகளும் நினைத்துக்கொண்டு அனுமதி கொடுத்தனர்.
"கடல்கரையோரத்தில் நாங்கள் இடம் பார்த்துக்கொள்கிறோம். கடற்கரையெல்லாம் மணல்தானே. உங்களுக்குப் பயனில்லாத இடம். அதையே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்", என்றனர்.
ரொம்பச் சந்தோஷத்தோடு மன்னன் அனுமதி கொடுத்துவிட்டான்.
பிரிட்டிஷ்காரர்கள் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுத்தோல் ஒன்றை அதன்மீது வைத்தனர்.
பின்னர் அதனை அவிழ்த்து நீட்டிப் பிடித்து இழுத்து விரித்தனர்.
அதுபாட்டுக்கு விரிந்துகொண்டே சென்றது.
முடிவில் மூன்று மைல் நீளமும் இரண்டு மைல் அகலமும் கொண்ட விரிப்பாகப் பரந்து விளங்கியது.
ராஜாவிடம் அந்த இடத்தைக் காட்டிவிட்டனர்.
ராஜாவிடம், "இங்கு நாங்கள் சாமான்களை வரவழைத்து வைத்துக்கொள்ள கூடாங்கு கட்டிக் கொள்கிறோம்", என்றனர்.
"சரிதான்", என்று ராசா தலையசைத்துவிட்டு அந்தப் புறமாகச் சென்றார்.
பிரிட்டிஷ்காரர்கள் கூடாங்கு கட்டிக்கொண்டனர்.
பின்னர் ராசாவிடம் சென்று, "ஓ ராசாவே! உங்கள் நாட்டில் திருட்டுப் பயம் அதிகம். ஆகவே எங்கள் கூடாங்கைப் பாதுகாக்கச் சுவர் கட்டிக் கொள்கிறோம்", என்றனர்.
"சரிதான்" என்று சொல்லிவிட்டு ராசா அந்தப்புரம் சென்றார்.
இவர்கள் இந்தப்புறத்தில் பெரிய சுவர்களைக் கட்டிக்கொண்டனர்.
சுற்றிலும் அகழி. அரண்கள். உள்ளுக்குள் என்னவிருக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்குப் பக்காவாக இருந்தது.
"ஓ ராசா! எங்கள் வர்த்தகத்தை நாங்கள் பல இடங்களில் செய்வதற்கு எங்களுக்குப் போதிய பாதுகாப்பு வேண்டும். ஆகவே நாங்கள் சோஸர்கள் வைத்துக்கொள்கிறொம்", என்று சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டனர்.
சோஸர்கள் எனப்படும் போர்வீரர்கள் ஏராளமாக வந்து சேர்ந்தனர்.
அவர்களுடன் ஆயுதங்கள் எக்கச்சக்கமாக வந்திறங்கின.
பேய்வாய்ப் பீரங்கிகளும் வந்துசேர்ந்தன.
(இதுவரைக்கும் அந்த அம்மானையில் காணப்படும். அதன்பின்னர் சம்பந்தப்பட்ட போரைப் பற்றி அந்த அம்மானை பேசும்).
இதற்குமேல் நடந்தது........?
மேலே படியுங்கள்.
இதன் நடுவே அந்த நாட்டில் பலவகையான குழப்பங்கள் ஏற்பட்டன.
நவாபு என்னும் ராசா ஆட்சிக்கு வந்தான்.
பிரிட்டிஷ்காரர்கள் நவாபிடம் வந்து, "ஐயா நவாபு. உங்க நாட்டில் கலகம் மிகுந்துவிட்டது. உங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம். நாங்களே உங்களுக்கு கிஸ்தி வசூல் செய்து கொடுக்கிறோம். எங்கள் கோட்டைக்குப் பக்கத்திலேயே அழகான அரண்மனையையும் கட்டிக்கொடுக்கிறோம். நீங்கள்பாட்டுக்கு வசதியாக இருங்கள்", என்றார்கள்.
நவாபும் அதே மாதிரி செய்ய ஒத்துக்கொண்டான். அந்த அரண்மனையில் சொகுசாக இருந்துகொண்டு நன்றாகச் செலவழித்துக்கொண்டிருந்தான்.
"ஐயா நவாபு. நீங்கள்தான் இந்நாட்டு மன்னர். எல்லாரும் பார்த்துவியக்கும்வண்ணம் நன்றாக தர்பாராக இருக்கவேண்டும். பணத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையேபடவேண்டாம். நாங்கள் தருகிறோம். கொஞ்சம் வட்டி மட்டும் போட்டுக ்கொள்கிறோம்", என்றனர்.
"ஆஹா! ஆஹா!" என்று நவாபு சந்தோஷப்பட்டான்.
சில ஆண்டுகள் கழித்துக் கடன ஒடன வாங்கி கடனுக்கு மேல் கடனாக பேட்டை ரேப்பில் வடிவேலு சொன்ன மாதிரி நவாபுக்கு ஆகிவிட்டது.
"அதனால் என்ன நவாபு! நீங்க கவலையே படாதீங்க. பணம் நாங்க இன்னும் தருகிறோம். நீங்க சில பிரதேசங்களை எங்களுக்குக் கொடுத்து விடுங்கள். இன்னின்ன சலுகைகள் வேண்டும். அவற்றையும் கொடுத்துவிடுங்கள்", என்று சொல்லி வாங்கிக் கொண்டனர்.
"அச்சா! அச்சா! பஹ¥த் அச்சா" என்று நவாபும் சம்மதித்தான்.
பிரிட்டிஷ்காரர்களிடம் கிஸ்தி செலுத்துவதில் சில பாளையக்காரர்களுக்கு இஷ்டமில்லை. ஆகவே கொடுக்கவில்லை. கலகமும் செய்தனர்.
பிரிட்டிஷ்காரர்கள் நவாபின் படைகளையும் தாங்களே எடுத்துக்கொண்டு தங்கள் படைகளையும் சேர்த்துக்கொண்டு கலகக்கார பாளையக் காரர்களுடன் போருக்குச் சென்றனர்.
நவாபின் படையினர் சம்பளம் சாடிக்கை, பிரிட்டிஷ் துருப்புகளின் செலவு எல்லாவற்றுக்குமாக நவாபுக்கு பில் அனுப்பினர்.
கலகம் உள்நாட்டுப் புரட்சியாகவும் போராகவும் மாறியது.
நவாபிடம் பிரிட்டிஷ்காரர்கள், "இந்த சிட்டுவேஷனைச் சமாளிக்க எங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வேண்டும். இன்னும் அதிகமாகப் பணமும் வேண்டும். பணிந்துபோன பாளையக்காரர்களெல்லாம் பயனடைய வேண்டும். ஆகவே எங்களிடம் எல்லா அதிகாரங்களையும் ஒப்படையுங்கள்", என்று கேட்டு வாங்கிக ்கொண்டனர்.
அதன ்பின்னர் பாளையக்காரர்களையெல்லாம் அடக்கிவிட்டனர்.
தங்களுடைய அதிகாரத்தை நிறுவிக்கொண்டனர்.
அப்போது கடன்கார நவாபு செத்துப்போய் அவனுடைய மகன் பட்டத்துக்கு வந்துவிட்டார். பாவம். இந்துஸ்தானிக்காரராக இருந்தாலும்கூட நல்ல தமிழ் அறிஞர். புலவர். கடனும் சமாளிக்கமுடியாத அளவுக்குப் போய் விட்டிருந்தது.
பிரிட்டிஷ்காரர்கள் அவரிடம், "இந்த பாளையக்காரப் பசங்களெல்லாம் இப்ப அடங்கிப்போயிட்டாங்க்ய. எப்ப என்ன செய்வானுவனு ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆகையினால நீங்க இன்னா செய்றீங்கோ தெர்யும்? பேசாம எங்ககிட்ட நாட்டை ஒப்படைச்சுருங்க. அல்லாத்தயும் நாங்க பாத்துக்கினு கீறோம். நாங்க வர்சா வர்சம் பென்சனு தர்ரோம். நீ சொம்மா குந்திக்கினு நாஷ்்டா சாப்டு, நய்னா. அக்காங்!" என்று சொன்னார்கள்.
சென்னையில் பல காலமாக இருந்துவிட்டனரா. ஆகவே இந்த நாட்டுக்கு வரும்போது ஒழுங்காகத் தமிழ் பேசிக்கொண்டிருந்தவர்கள் மெட்ராஸ் பாஷையில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நவாபும் அவ்வாறே செய்தார்.
கொஞ்சநாட்கள் கழித்து கோட்டையை அடுத்திருந்த அரண்மனையையும் கொடுத்துவிட்டு வேற்றிடம் சென்றுவிட்டார்.
இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடுங்குற கதையாகவல்லவா இருக்கிறது!
அடடே! நான் பழமொழியைத்தான் சொன்னேன்.
எல்லாமே ஓர் ஆட்டுத்தோலால் வந்தது.
அன்புடன்
ஜெயபாரதி
0 comments:
Post a Comment